சென்னை பெருங்களத்தூர் மற்றும் குரோம்பேட்டையில் ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளி கடந்த 1983ஆம் வருடம் முதல் இயங்கி வருகிறது. இந்த இரண்டு பள்ளிகளிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.
பள்ளியின் தாளாளரான சந்தானம், பள்ளியில் வரும் வருமானத்தைக் கொண்டும், மேலும் சில வங்கிகளில் கடன் பெற்றும் கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்தார். சுமார் 700 கோடிக்கு அவர் கட்டிய அப்பார்ட்மெண்ட்ஸ் சரியாக விற்பனையாகவில்லை. இதனிடையே கடன் கொடுத்த வங்கிகள் பாக்கித் தொகையை கட்ட வேண்டும் என நெருக்கடி கொடுத்தன.
இந்தநிலையில்தான் வங்கிகளில் வாங்கிய கடனை அடைப்பதற்காக, தனது பள்ளியில் படிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மூலம் அவர்களது பெற்றோருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார் சந்தானம். அதில், ஒவ்வொரு மாணவர்களும் தலா இரண்டு லட்சம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். யாரும் பணம் கட்ட முன்வராததால் சந்தானம், பள்ளியில் மாணவர்களிடம் மைக்கில் பேசியுள்ளார். அப்போது பணம் கட்ட முன்வராத பெற்றோர்களை அவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை பிள்ளைகள் மூலம் அறிந்த பெற்றோர்கள், பீர்க்கன்கரணை காவல்நிலையத்தில் சந்தானம் மீது புகார் அளித்தனர்.
புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் இன்று காலை பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் அளிக்கவில்லை. பின்னர் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தானம் மாணவர்களிடம் பணம் கேட்டது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே ஒரு சிலர், எங்கள் பிள்ளைகள் ஏரோப்பிளேனில் போக வேண்டும் என்றால், நல்ல வேலைக்கு போக வேண்டும் என்றால், நாங்கள் இரண்டு லட்சம் கட்டுவோம், சந்தானம் இருந்தால்தான் அந்த பள்ளியை திறம்பட நடத்துவார், ஆகையால் சந்தானத்தை விடுதலை செய்யுங்கள் என்று காவல்நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
மாணவர்களிடம் தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் கேட்டதும், பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டிருப்பதும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.