Skip to main content

தி.மு.க. இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது! ஓ.பி.எஸ். பரபரப்பு பேச்சு!

Published on 26/09/2018 | Edited on 26/09/2018


 

ops Speech

    

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் சிங்கள இராணுவத்திற்கு உதவிபுரிந்த தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தேனி பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள பங்களா மேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கொள்கை பரப்பு செயலாளரான வைகைச்செல்வன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 
 

கூட்டத்தில் துணை முதல்வரான ஓ.பி.எஸ். பேசும்போது... இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்பாவி மக்கள் குற்றுயிரும், குலை உயிருமாக முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த நிலைக்கு தி.மு.க.வும் காங்கிரசும் தான் காரணம். 

 

ops Speech



தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, இலங்கையில் மிகப்பெரிய போர் நடக்கும் சூழல் உருவாகி இருந்தது. அப்போது இலங்கைக்கு எச்சரிக்கை விடுங்கள் என்று ஜெயலலிதா பலமுறை வலியுறுத்தினார். அதற்கு பலனில்லை. 2001-ல் இருந்து 2006ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார். அதற்கும் பலனில்லை. 
 

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது போர் மும்முரமாகிவிட்டது. அதை மறைப்பதற்கு மனித சங்கிலி நடத்தினார்கள். கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அது கபட நாடகம். அப்போது இலங்கையில் போர் நிறுத்தம் வந்துவிட்டதாக கருணாநிதி கூறினார். அதை நம்பி பதுங்கு குழிகளில் இருந்த அப்பாவி மக்கள் வெளியே வந்தனர். இலங்கை ராணுவம் குண்டு மழையாக போட்டு 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை கொன்று குவித்தது. இதில் குழந்தைகள் மட்டுமே 40 ஆயிரம் போர். இது மிகப்பெரிய துரோகம். 

 

ops Speech


 

போர்க்களத்தில் இருந்த பிரபாகரனை வைகோ சந்தித்தபோது அவரிடம் கருணாநிதியிடம் கொடுக்க ஒரு கடிதம் கொடுத்துவிட்டார். எம்மக்கள் மிகப்பெரிய அபாயத்தில் மொத்தமாக சாகப்போகும் நிலையில் எங்களின் சூழ்நிலை உள்ளது. தமிழக மக்களிடம் இதை எடுத்துச் சொல்லி மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி எங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதை கருணாநிதி கண்டு கொள்ளவே இல்லை.
 

இலங்கை தமிழர்கள் மீது சிறிதளவும் அக்கறை இல்லாத கட்சியாகவும், இயக்கமாகவும் தான் தி.மு.க. இருந்தது என்பதை இப்போது ராஜபக்சே வந்து நேரடியாக பேட்டி கொடுத்துவிட்டு போய்விட்டார். இதைத்தான் ஜெயலலிதா அப்போதே சொன்னார். இந்த இனப்படுகொலை நடப்பதற்கு தி.மு.க.வும் காங்கிரசும் தான் காரணம் என்று. 

 

ops Speech


வைகோ அப்போதே ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். தான் உயிரோடு இருக்கும் வரை மீண்டும் கருணாநிதியை முதல் அமைச்சராகவோ, ஸ்டாலினை முதல் அமைச்சராகவோ வரவிடமாட்டேன் என்றார். இப்போது ஸ்டாலினை முதல் அமைச்சர் ஆக்குவதே என் முதல் வேலை என்று கூறுகிறார். என்ன ஒரு நாடகம். இதனால் தானே தொடர்ந்து மக்கள் மன்றத்தில் நீங்கள் தோல்வியை சந்தித்துக்கொண்டு இருக்கிறீர்கள். வைகோ பேசியதை எப்போதும் மறந்துவிடுவார். பேசியதை மறந்துவிட்டு  வேறு ஏதாவது பேசி மாட்டிக் கொள்வார். அவர் நல்ல அரசியல்வாதிதான். ஆனால் இப்போது கெட்டுப் போய் விட்டார். 
 

ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி. சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதுவும் பலனில்லை. இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்து உள்ளதாக ஐ.நா. சபையில் அமெரிக்கா ஒரு  தீர்மானம் கொண்டு வந்தது. அது வலுவான தீர்மானம். கருணாநிதி அவசர அவசரமாக டெல்லியில் பேசி அந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தார். 

 

ops Speech


 

இலங்கை தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய துரோகத்தை தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து செய்து இருக்கிறது என்றால் தமிழக மக்கள் அவர்களை நம்புவார்களா? தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். இனப் படுகொலைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியது தி.மு.க.வும், காங்கிரசும் தான் என்று மக்கள் தெரிந்து கொண்டார்கள். இனி எந்த காலத்திலும் இவர்கள் ஆ;சிக்கு வர முடியாது. என்றை;கும் இவர்கள் மக்கள் மன்றத்தை சந்திக்க முடியாது.
 

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது நாங்கள் எல்லாம் கோவில், கோவிலாக சென்று வழிபாடு செய்தோம். தினகரன் ஒரு கோவிலுக்காவது சென்று பிரார்த்தனை செய்து இருப்பாரா? ஆட்சி கவிழும் என்கிறார். இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் எல்லாம் இன்றைக்கு எங்கே சென்று விழுந்து கிடக்கிறார்கள் என்பது தெரியும். இது தெய்வீகமான காட்சி. இந்த கட்சிக்கு எவன் ஒருவன் துரோகம் செய்கிறானோ, அவன் செல்லாக்காசு ஆகிவிடுவான். 

 

ops Speech



அ.தி.மு.க.வுக்கு பிடித்து இருந்த சனி விலகிவிட்டது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது. காங்கிரசையும், தி.மு.க.வையும் ராஜபக்சேவுடன் சேர்த்து போர்க்குற்றவாளி என்ற கூண்டில் ஏற்றி சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதுதான் நியானமான தீர்ப்பாக இருக்கும். அதுதான் தமிழக மக்களின் விருப்பம். அப்போது தான் போரில் இறந்த தமிழர்களின் ஆன்மா மன்னிக்கும். இல்லையேல் இவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று கூறினார்.
 

அதைத்தொடர்ந்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து கண்டன குரல் எழுப்பினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ரவீந்திரநாத், எம்.பி. பார்த்திபன், மாவட்ட துணைச் செயலாளர் முருக்கோடை ராமர் உள்பட பொறுப்பில் உள்ள ர.ர.க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்