கலவரம் நடந்த கனியாமூர் பகுதி மற்றும் தனியார் பள்ளியில் தமிழக காவல்துறைத் தலைவர் டாக்டர் சைலேந்திர பாபு இ.கா.ப., தமிழக உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், சட்டம்- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வு பின்னர் உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய, காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு, "சின்னசேலத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவி மரணம் தொடர்பாக, தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, "வதந்திகளை நம்பி பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம்; மாணவி மரணம் தொடர்பாக, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரணை நடத்தும். மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.