தமிழ்நாட்டில், 12 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முடிந்த நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 4,207 தேர்வு மையங்களில் 9,96,089 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். நேற்று துவங்கிய 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு காலத்தையும், இந்தக் கல்வி ஆண்டின் இறுதி வேலை நாளையும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21 ஆம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல், 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உள்ளூர் நிலைக்கேற்ப ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 28க்குள் இறுதித் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் பள்ளியின் இறுதி நாளாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.