வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணுர் கிராமத்தில் வாணி மெட்ரிக் என்கிற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி காயத்ரி. அவர் இந்த பருவத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லையாம், அதனால் அந்த மாணவி கடந்த 3 தினங்களாக வகுப்பறைக்கு வெளியேவே நிறுத்தி வைத்துள்ளது பள்ளி நிர்வாகம்.
இதனால் அந்த மாணவி மனவேதனை அடைந்துள்ளார். காலை முதல் மாலை வரை வெளியேவே நிற்பது, மாலையில் வீட்டுக்கு அனுப்பிவைப்பது என நடத்தியுள்ளது பள்ளி நிர்வாகம். சீக்கிரம் வந்து கட்டணம் செலுத்திவிடுவார்கள் எனச்சொல்லியும் நிர்வாகம் கேட்கவில்லையாம்.
இந்நிலையில் அக்டோபர் 22ந் தேதி மாலை பள்ளி வளாகத்தில் நீண்ட நேரம் நிற்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்த சக மாணவர்கள் ஓடிவந்து முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டுள்ளனர். பின்னர் பெற்றோர்க்கு தகவல் சொல்லியுள்ளனர். அவர்கள் வந்து அழுதபடியே தன் மகளை அழைத்து சென்று வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இது பள்ளியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தை கேள்விப்பட்ட சமூக ஆர்வலர்கள், கல்வி கட்டணம் கட்டப்போகிறார்கள். அதற்காக உடல்ரீதியாக சித்திரவதை செய்கிறோம் என்கிற பெயரில் மனரீதியாக பாதிப்படைய வைத்துள்ளார்கள். அந்த மாணவி மற்ற மாணவர்கள் முன்னால் எப்படி சகஜமாக பேசி, சிரிப்பார், எப்படி தேர்வை எதிர்க்கொள்வார் என கேள்வி எழுப்புகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் மீது கல்வித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.