கிருஷ்ணகிரி அருகே, 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற அரசுப்பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஜிஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி காவியா (வயது 30). இவர், திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். காவியாவுடன், மூர்த்தியின் முதல் மனைவிக்கு பிறந்த 16 வயதான மகளும் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கரோனா பரவல் காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்களிப்பதற்காக கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதியன்று மகளுடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதையடுத்து, ஏப். 9- ஆம் தேதி மீண்டும் மேல் செங்கத்திற்கு செல்வதற்காக மகளை அழைத்துக்கொண்டு மத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார் காவியா. உடன் அழைத்து வந்த மகள் திடீரென்று காணாமல் போனார்.
அதிர்ச்சி அடைந்த காவியா, இதுபற்றி உடனடியாக மத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், திருவண்ணாமலை மாவட்டம், நாகனூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரண்ராஜ் (வயது 31), திருமணம் செய்துக் கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மகளை கடத்திச் சென்று விட்டதாகக் கூறியிருந்தார்.
சரண்ராஜூக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி, அவர்களைப் பிரிந்து வாழ்கிறார் என்றும், மகளை காதலிப்பதாக அவர் பின்னால் அடிக்கடி ஆசிரியர் சரண்ராஜ் சுற்றி வந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மத்தூர் காவல் நிலைய காவல்துறையினர், விரைந்து செயல்பட்டு சரண்ராஜிடம் இருந்து சிறுமியை மீட்டனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.