என்னதான் ஆசிரியர்கள் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும், கிராமப்புறங்களில்கூட தனியார் பள்ளிகளுக்கு இருக்கும் மோகம், அரசுப்பள்ளிகள் மீது ஏற்படவில்லை என்பதற்கு இப்போது நாம் சொல்லப்போகும் பள்ளியும் இன்னுமொரு சான்றாக அமையும் எனலாம்.
ஆசிரியர் : மாணவர் விகிதாச்சாரங்களை ஒப்பிடுகையில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும், அரசுப்பள்ளிகளில் மாணவர் கூட்டம் குறைவு. அதுவும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தற்போது ஒரே ஒரு மாணவியுடன் மட்டுமே இயங்கி வருகிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
கடந்த 1956ம் ஆண்டில் உதயமானது இந்தப்பள்ளி. ஜோகிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை குழந்தைகளின் படிப்புக்காக கைக்கொடுத்தது ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிதான். அப்பள்ளியில் படித்த பலர், இப்போது அரசுத்துறைகளில் பல்வேறு பொறுப்புகளிலும் இருக்கின்றனர்.
ஆனால், இந்தப்பள்ளியின் இன்றைய நிலையோ படுமோசம் என்கிறார்கள் அந்த கிராமத்துக்காரர்கள். காலம் செல்லச்செல்ல, ஆங்கில மோகம் தனியார் பள்ளிகள் மீது ஈர்ப்பை அதிகரிக்க, கழிப்பறை கூட இல்லாத அரசுப்பள்ளிகளை மக்களே புறந்தள்ள தொடங்கினர்.
அதன் விளைவு, பெரிய ஜோகிப்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வேகமாக சரியத்தொடங்கியது. கடந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த நிலையில், நடப்பு ஆண்டிலோ ஒரே ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு பெயரளவுக்கு இயங்கி வருகிறது.
பள்ளியை நிர்வகிக்க ஒரு பெண் தலைமை ஆசிரியர், குழந்தைக்கு மதிய உணவு வழங்க ஒரு சத்துணவு ஊழியர் ஆகியோரும் பணியில் உள்ளனர். அந்தக் குழந்தையுடன் சேர்த்து, இப்போதைக்கு மூன்று பேர் மட்டுமே அந்தப் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ரேகாவிடம் கேட்டபோது, ''கடந்த ஆண்டு இந்தப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்தனர். ஆங்கில வழிக்கல்வி மீதுள்ள மோகத்தால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். கிராம மக்களை ஒருங்கிணைத்து அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு பரப்புரை செய்தும், பெரிதாக பயனளிக்கவில்லை. மாணவி ஸ்ரீலேகா மட்டும் இந்தப் பள்ளியில் தற்போது 4ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளும் தனியாக படிக்க சிரமப்படுகிறாள்,'' என்றார்.
சிறுமி ஸ்ரீலேகாவிடம் கேட்டபோது, ''நான் மட்டும் இந்தப் பள்ளியில் படிக்க கஷ்டமாக இருக்கிறது. ஓடிப்பிடித்து விளையாடக்கூட பிரண்ட்ஸ் இல்லை. இதனால எனக்கும் பள்ளிக்கூடம் வருவதற்கே பிடிக்கவில்லை,'' என்றாள்.