கள்ளக்குறிச்சி அருகே உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது போலீசார் பாதுகாப்புடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்தக் கோவிலில் நீண்ட வருடங்களாக பட்டியலின மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு கோவிலின் தேர் இழுக்கும் நிகழ்வில் பட்டியலின மக்கள் தேர் இழுக்கக் கூடாது என்று பிரச்சனை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர். அதனையடுத்து, கடந்த 6 மாதங்களாக கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் கோவில்கள் அனைவருக்கும் சமமானது என்று கூறி ஜனவரி 2 ஆம் தேதி பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று 500-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு பட்டியலின மக்கள் தற்போது மிகுந்த உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் இன்றைக்கு அவர்கள் தரிசனம் செய்து விட்டனர். இனிவரும் காலங்களில் எந்தவித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் கடவுளை வணங்க போலீஸ் பாதுகாப்பு ஏதுமின்றி அவர்களுக்கான உரிமை தொடருமா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சமீபத்தில் புதுகை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் கோவிலுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அதன் பின் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலையிட்டு அவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.