கீரமங்கலம் பகுதியில் நிலத்தடி நீரை சேமிக்க வரத்து வாய்கால்கள் சீரமைக்க நிதி வழக்கும் இளைஞர்கள்
கீரமங்கலம் பகுதியில் உள்ள நீர்நிலைகை உயர்த்தி நிலத்தடி நீரை பாதுகாக்க விவசாயிகளே சொந்த செலவில் வரத்து வாய்க்கால்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிக்காக இளைஞர்களும் நிதி வழங்கி வருகின்றனர்.

நீர்மட்டம் குறைந்தது :
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக குளங்கள் உள்ள மாவட்டமாக இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளில் குளங்கள் மற்றும் குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் எந்த குளத்திலும் தண்ணீர் நிரம்பவில்லை. அதனால் குளம், ஏரி தண்ணீரை நம்பி செய்த விவசாயம் பொய்த்துப் போனது. ஆதன் பிறகு கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் விவசாயப்பணிக்காக ஆழ்குழாய் கிணறுகளை அமைத்த விவசாயம் செய்து வந்தனர். தொடக்கத்தில் சுமார் 330 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்த விவசாயிகளுக்கு குளம், ஏரிகளில் தண்ணீர் தேங்காததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. அதனால் தற்போது கொத்தமங்கலம், மறமடக்கி, குளமங்கலம், வடகாடு ஆகிய பகுதிகளில் சுமார் 1200 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து வருகின்றனர். இந்த ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து எண்ணெய் படலங்களும் மிதக்கிறது.
தூர்வார இளைஞர்கள் நிதி :
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் பல ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இன்றி விவசாயம் கருகியது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் இந்த ஆண்டு மழையின் தொடக்கத்திலேயே ஏரி குளங்களில் தண்ணீரை சேமிக்க தங்கள் சொந்த செலவில் வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கீரமங்கலம் வடக்கு பகுதியில் உள்ள குளங்களுக்கு அம்புலி ஆறு காட்டாற்றில் இருந்து தண்ணீர் வரத்து வாய்க்கால்களை சீரமைத்தனர். அதே போல கீரமங்கலம் தெற்கு பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வர வில்லுன்னி ஆற்றில் பனங்குளம் தடுப்பணையில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் வரை உள்ள வரத்து வாய்க்காலை சீரமைத்து வருகின்றனர். அதே போல நகரம் பெரிய குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால் சீரமைத்துள்ளனர். குளமங்கலம் வடக்கு கிராமத்தில் வரத்து வாய்க்காலை சீரமைத்து குளத்தில் தண்ணீரையும் நிரம்பியுள்ளனர் விவசாயிகள்.
நிலத்தடி நீரை சேமிக்க சொந்தமாக செலவு செய்து வாய்க்கால்களை சீரமைக்கும் விவசாயிகளிடம் ஆலடிக்கொல்லை நேரு இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் ரூ. 5 ஆயிரம் நிதி வழங்கினார்கள். மேலும் பல கிராமங்களிலும் இளைஞர்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
-இரா. பகத்சிங்