Skip to main content

ம.தி.மு.க. பெரியார் - அண்ணா பேச்சுப் போட்டியில் வென்ற மாணவிக்கு ரூ.1 லட்சம் - தங்கப் பதக்கம்!

Published on 03/09/2018 | Edited on 04/09/2018
mdmk


மதிமுக மாணவர் அணி சார்பில், பெரியார் - அண்ணா என்ற தலைப்பில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

முதல் கட்டமாக மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜூலை 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பெற்றது. இதில் 1500 கல்லூரிகளைச் சேர்ந்த 2200 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இதில் மூன்று மாணவ - மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக 6 ஆயிரம், இரண்டாம் பரிசு 4 ஆயிரம், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக மண்டல அளவிலான பேச்சுப் போட்டிகள் சென்னை, கடலூர், சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய ஏழு மண்டலங்களில் நடைபெற்றது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூன்று பேர் தேர்வுசெய்யப்பட்டு முறையே 10ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

மண்டல அளவிலான போட்டிகளில் 120 மாணவ - மாணவிகள் பங்கேற்று, மாநிலப் போட்டிக்கு 21 பேர் தகுதி பெற்றனர்.

மாநில அளவிலான பேச்சுப் போட்டி சென்னை - புரசைவாக்கத்தில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பான்செக்கர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தி.அட்சயா முதல் பரிசு ஒரு இலட்சமும், 30 ஆயிரம் மதிப்பிலான பெரியார் - அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கமும் பெற்றார்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஆ.நாகமுத்துப்பாண்டியன் இரண்டாம் இடம் பிடித்து ரூபாய் 50 ஆயிரமும், பெரியார் - அண்ணா முகம் பதித்த வெள்ளிப்பதக்கமும் பெற்றார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் இ.பிரதீப் மூன்றாம் இடம் பிடித்து ரூபாய் 25 ஆயிரமும், பெரியார் - அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கி, பதக்கம் அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்.
 

mdmk


பேச்சுப் போட்டி நடத்துவதன் நோக்கங்கள் குறித்து நெல்லை மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் உரையாற்றினார்.

இப்போட்டிக்கு மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாநிலத் துணைச் செயலாளர் வி.சேஷன் வரவேற்றார்.

நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் செ.செவந்தியப்பன், உயர்நிலைக்குழு உறுப்பினரும், சட்டத்துறைச் செயலாளருமான வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், மாவட்டக் கழகச் செயலாளர்கள் டி.சி.இராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, ஊனை ஆர்.இ.பார்த்திபன், மா.வை.மகேந்திரன், வேலூர் வ.கண்ணதாசன், ஆற்க்காடு பி.என்.உதயகுமார், சேலம் மாநகர் ஆனந்தராஜ், மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் ப.த.ஆசைத்தம்பி, துரை.மணிவண்ணன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் முகவை இரா.சங்கர் நன்றியுரை ஆற்றினார்.

முனைவர் கு.திருமாறன், பேராசிரியை விமலா அண்ணாதுரை, இலக்கியச் சொற்பொழிவாளர் கங்கை மணிமாறன் ஆகியோர் பேச்சுப் போட்டியில் நடுவர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சி மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி சார்பாக நடத்தப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்