தமிழ்நாட்டில் விவசாயிகளின் கடன்களையும், மாணவர்களின் கல்விக்கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்குறுதி அளித்தனர். இப்போது அக்கூட்டணியில் 37 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.
எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி, இன்னும் 6 மாத காலத்தில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களும் அவர்களின் சொத்துகளை விற்றாவது ஓட்டுப்போட்ட மக்களுக்கு விவசாய கடன்களையும், படிப்புக்காக மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்களையும் அடைத்து கொடுத்தாக வேண்டும்.
மேலும் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்துவிடக்கோரி, 37 எம்.பி.க்களும் கர்நாடகாவில் நடைபெறும் கூட்டணி கட்சி அரசிடம் சென்று முறையிட வேண்டும். காவிரி தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசு செய்யவேண்டிய பணிகளை கட்டாயம் செய்யும் என முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சு.திருநாவுக்கரசர், ‘கடந்த 5 ஆண்டுகளாக மத்திய மந்திரியாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொத்துக்களை விற்று கடன்களை அடைத்து முன்உதாரணமாக இருக்கட்டும்’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் குமரி மாவட்டம், தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், அவரது கருத்துக்கு ஏற்ப எனது சொத்துக்களை எழுதி தர தயார். தங்களது சொத்துக்களை எழுதி தர அவரும், அவர்களது கட்சி எம்.பி.க்களும் தயாரா?. நான் எனது மொத்த சொத்து விவரங்களையும் தருகிறேன். எழுதி தர என்று? எங்கே? வரவேண்டும். அதுபோல் அவர்களும் வரட்டும். அவ்வாறு எழுதினால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களுக்கும், குமரி மாவட்ட மக்களுக்கு கிடைக்கும்.
தூத்துக்குடி மக்கள் காங்கிரஸ், தி.மு.க. மீதுதான் கோப பட வேண்டும். மக்கள் எதிர்த்து போராடும் திட்டம் அனைத்தும் அவர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இவற்றுக்கு ஆதாரங்கள் உள்ளன. வேண்டுமென்றால் விவாதத்திற்கு வரட்டும் என்றார்.