Skip to main content

“விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை” - சத்யபிரதா சாகு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Sathyapratha Sahu says  Action against companies that do not grant leave at loksabha election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

அதே வேளையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

ஏற்கனவே, மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது. அதே போல், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (15-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை வருகிற 17ஆம் தேதி மாலையுடன் முடிவடைய உள்ளது. பூத் சிலிப் வழங்கும் பணி 92.80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நாளை மாலையுடன் முழுவதுமாக அந்தப் பணி நிறைவடையும். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். 

தேர்தல் நாள் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். 19ஆம் தேதி விடுமுறை இல்லை எனத் தெரிந்தால் 18ஆம் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் தங்களுடைய புகார்களை அளிக்கலாம்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்