புதியதாக உருவாகியுள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்குள் வருகிறது ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை. 1960ல் காமராஜர், தமிழக முதல்வராக இருந்தபோது இந்த சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது. இந்த ஆலைக்கு ஆம்பூர், வாணியம்பாடி, உமராபாத், பள்ளிக்கொண்டா, குடியாத்தம், அணைக்கட்டு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு பயிரிடும் விவசாயிகள் கரும்பை வெட்டி இந்த மில்லுக்கு அனுப்பிவைத்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த மில்லுக்கு கரும்பு வரத்து குறைந்துள்ளது. இதற்கான காரணம், சரியான நேரத்தில் கரும்பு விவசாயிகளுக்கான தொகையை தராதது, மழையில்லாததால் கரும்பு சாகுபடி குறைந்தது போன்ற சில காரணங்களால் கரும்பு வரத்து குறைந்தது. இதனால் வருடத்தில் சில மாதங்கள் ஆலை இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் இயங்கும்.
சில மாதங்களாக முன்பை விட அதிகளவு கரும்பு வரத்து குறைந்துள்ளது. இதனால் எப்போது திறப்போம் எனச்சொல்லாமல் ஆலையை மூடியுள்ளது நிர்வாகம். நிர்வாகத்தின் இந்த நிலையை கண்டித்து தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக ஆலைக்குள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலைக்கான கரும்பு லோடுகளை வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மாற்றி அனுப்பியுள்ளனர் அதிகாரிகள். இதனால் விவசாயிகள் தங்களது கரும்புகளை வேலூருக்கு அனுப்பிவருகின்றனர்.
இதுப்பற்றிய தகவல் அறிந்த திமுகவை சேர்ந்தவர்களும், ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன், வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமார், குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் மூவரும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தை சந்தித்து, நேரடியாக 1500 தொழிலாளர்களும், மறைமுகமாக 5 ஆயிரம் தொழிலாளர்கள் நம்பியுள்ள சர்க்கரை ஆலையை முன்னறிவிப்பின்றி மூடுவது நியாயமானதல்ல என்றும், ஓராண்டுக்கு ஆலையை மூடிவைக்க முடிவெடுத்திருப்பது சரியானதல்ல என்று கோரியுள்ளனர்.
இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, ஆலையில் உள்ள இயந்திரங்கள் பழுதடைந்துவிடும் எனச்சொல்லி, உடனடியாக ஆலையை திறக்க வேண்டும் என மனு தந்துவிட்டு வந்துள்ளர்.