சிறுத்தைப் புலிகளின் வாழ்விடமாக இருக்கிறது சத்தியமங்கலம் வனப்பகுதி. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் வாழும் மலை மக்கள், ஆதிவாசிகள் தங்களுக்கு தேவையான கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். மேலும் வனவிலங்குகள் வருவதை அறிய காவலுக்கு நாய்களையும் வளர்த்து வருகிறார்கள். இப்படி மலைவாசிகள் வளர்ந்து வரும் விலங்குகளை கடித்து சாப்பிட தொடங்கியுள்ளது சிறுத்தைகள்.

தூக்கநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் நாட்ராயன் கரட்டு தோட்டம் என்ற பகுதி உள்ளது. இங்கு வெள்ளியங்கிரி என்ற விவசாயி விவசாயம் செய்து வருகிறார். இவர் தோட்டத்தின் காவலுக்காக நாய்களை வளர்த்து வந்தார். கடந்த மூன்று மாதத்தில் மட்டும் நான்கு நாய்களை சிறுத்தைகள் கடித்து கொன்று சாப்பிட்டு விட்டு சென்றுள்ளது. நாட்டு நாய்களை தான் சிறுத்தைகள் அதிகமாக பதம் பார்க்கிறது. உயர் ரக நாய்களை கொண்டு வந்து வளர்ப்போம் என முதலில் டாபர்மேன் என்கிற உயர் ரக நாய் ஒன்றை பல ஆயிரம் கொடுத்து வாங்கி வந்து தனது தோட்டத்தில் கட்டி வைத்தார் விவசாயி வெள்ளிங்கிரி.

நேற்று முன்தினம் அங்கு வந்த சிறுத்தை டாபர்மேன் நாயை கொன்று, உடலை பாதி அளவு தின்று முடித்தது. அதன் பசி அடங்கிய பிறகு அவ்விடத்தை விட்டு சிறுத்தை சென்றுவிட்டது. அதற்கு அடுத்த நாளான நேற்று மற்றொரு விவசாயிக்கான பெருமாள் என்பவரது ஆட்டுப் பட்டிக்குள் புகுந்து இரண்டு வெள்ளாடுகளை கடித்து சுவைத்து சாப்பிட்டு விட்டு சென்றுவிட்டது. இந்த சிறுத்தைகளை பிடிக்க வேண்டும் என பலமுறை வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தும் நடக்கவில்லை.
இப்போது நாய் மற்றும் ஆடுகளை கொன்று விட்டதால் அச்சமடைந்த விவசாயிகள், வனத்துறை வரவழைத்து கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என போராட்டம் செய்தனர் வனத்துறையினரும் வந்து தானியங்கி கேமரா வைத்து சிறுத்தை நடமாட்டத்தை பார்த்து விட்டபிறகு கூண்டு வைக்கிறோம் என கூறிவிட்டு சென்றுள்ளார்கள். இந்த மலைப்பகுதி சமநிலைப் பகுதியாக இருந்தாலும் வனப்பகுதியில் தொடக்கத்தில் உள்ளது. அதனால் என் ஏரியாவுக்குள் உனக்கென்ன வேலை என பாணியில் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடுவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.