Skip to main content

சாத்தான்குளம் இரட்டைப்படுகொலை: “வழக்கை திருவனந்தபுரத்திற்கு மாத்துங்க..” உச்ச நீதிமன்றத்தை நாடிய எஸ்.ஐ.ரகுகணேஷ்.!!!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Sathanukulam incident; SI Raguganesh petition supreme court to change the case from madurai to thiruvananthapuram

 

“மதுரையில் நடைபெறும் வழக்கினை திருவனந்தபுரத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைப் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் எஸ்.ஐ.ரகுகணேஷ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை, மகன் இருவரும் வழக்கிற்காக கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலை கண்காணிப்பிலிருந்து மருத்துவமனையில் தந்தை, மகன் இருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தனர். விவகாரம் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக ‘இருவரின் மரணமும் இயற்கையான மரணமே’ என அப்போதைய மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சரும் போட்டிப் போட்டுக்கொண்டு பேட்டியளித்தனர். இவ்வேளையில், ‘இருவரின் உடலிலும் காயங்கள் இருந்தன’ என கோவில்பட்டி கிளைச்சிறை மருத்துவர் எழுதிய மருத்துவக் குறிப்பை வெளியிட்டது நக்கீரன் !!! அதன்பின் தந்தை, மகன் சித்ரவதைக் கொலை வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை சூமோட்டோவாக எடுத்த நிலையில், வழக்கினை விசாரிக்க தானாக முன்வந்தது சி.பி.சி.ஐ.டி. அதன் பின் சி.பி.ஐ.யிடம் வழக்கு மாற, கடந்த 25-09-2020 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சி.பி.ஐ. தரப்பு.

 

மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற சி.பி.ஐ. சிறப்பு வழக்கு மன்றத்தில் நீதிபதி வடிவேலு முன்பு வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 18ம் தேதி குற்றவாளியென கைது செய்யப்பட்டிருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதரோ, “எனக்கு வழக்கறிஞர் வேண்டாம். நானே வழக்காடிக் கொள்கின்றேன்” என மனு ஒன்றை அளித்து, பின்பு “இப்போதைக்கு சேர்க்க வேண்டாம். பிறகு சேர்த்துக்கொள்ளலாம்” என நீதிபதியிடம் தெரிவித்தார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகின்ற மார்ச் 1ம் தேதியன்று நடைபெறும் என தேதியினை அறிவித்தார் நீதிபதி.
 

Sathanukulam incident; SI Raguganesh petition supreme court to change the case from madurai to thiruvananthapuram

 

இந்நிலையில், “பப்ளிசிட்டிக்காக தந்தை, மகன் லாக் அப் கொலை வழக்கில் நாங்கள் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளோம். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்னும் குற்ற வரைவு துவங்கவில்லை. இதே வேளையில், மதுரை சிறையில் இருக்கும் கைதிகளால் நாங்கள் எந்நேரமும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். ஆதலால், சி.பி.ஐ. நடத்தும் இந்த வழக்கினை மதுரையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்ற வேண்டும்” என உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்துள்ளார், சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைப் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் எஸ்.ஐ.ரகுகணேஷ்.

 

இது இப்படியிருக்க, வழக்கினை விரைந்து முடிக்க கொலையுண்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர் முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், “இதற்கான பதிலை வருகின்ற மார்ச் 9ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டார்.

 

படங்கள்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்