இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மே 10 ஆம் தேதி திரையங்கில் வெளியானது.
இப்படத்தை நெல்லையில் பார்த்துள்ளார் வெற்றிமாறன். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. பாடல்களின் காப்புரிமை இசையமைப்பாளருக்கு சொந்தமா அல்லது தயாரிப்பாளருக்கு சொந்தமா என்ற கேள்விக்கு, “காப்புரிமை பிரச்சனை இன்று எல்லா தளங்களிலும் உள்ளது. ஆனால் ஒரு கிரியேட்டருக்கான உரிய உரிமை மற்றும் மரியாதை தேவை” என்றார்.
விஜய்யின் த.வெ.க. செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, “2026ல் தான் களத்தில் பணியாற்றப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களது பணிக்கு பின்னரே அவர்களது செயல்பாடுகள் தெரியும். எல்லாருமே அரசியலுக்கு வரலாம். ஆனால் அதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிவிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
விடுதலை 2 பற்றிய கேள்விக்கு, “விடுதலை 2 ஷூட்டிங் போய்ட்டு இருக்கு. அதுக்காக தான் இங்க வந்திருக்கோம். இன்னும் 15 - 20 நாள் ஷூட் இருக்கு. இது ஒரு பீரியட் ஃபிலிம் என்பதால் அதுக்கான லொகேஷன் இங்க பொருத்தமா இருக்கு. முடிஞ்ச பிறகு ரெண்டு மூணு மாசத்துல ரிலீஸாகிடும். அது முடிஞ்சவுடன் வாடிவாசல் தொடங்கும்” என்றார்.