Skip to main content

குளியலறையில் கேமரா... இலங்கை அகதிகள் முகாமில் அதிர்ச்சி... இளைஞர் கைது

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

Dindigul district

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாம். இங்கு நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

 

இந்நிலையில் முகாம் குடியிருப்பில் உள்ள ஒரு பெண் தனது வீட்டு வேலையை முடித்து விட்டு குளிப்பதற்காக வீட்டின் வெளிப்புறம் இருந்த குளியல் அறைக்குச் சென்றுள்ளார். உள்ளே சென்றவர் குளியல் அறையை சுற்றிலும் நோட்டம் விட்டுள்ளார். அப்போது குளியல் அறையின் மேற்கூரை பகுதியில் கருப்பு நிறத்தில் சிறிய வெப்கேமரா ஒன்று பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து இளம்பெண் உறவினர்களுக்குத் தெரிவிக்க அப்பெண்ணின் உறவினர்கள் குளியலறையில் கேமரா பொருத்தப்பட்டிருப்பது குறித்து வத்தலக்குண்டு காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதனடிப்படையில் முகாமிற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், அதே முகாம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

 

விஜயகுமாரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், யூடியூப் சேனல் பார்த்து தானியங்கி வெப்கேமரா ஒன்றை தயார் செய்ததாகவும், செல்போனுக்கு பயன்படுத்தப்படும் பவர் பேங்க் மூலம் கேமராவை இயக்கச் செய்து கேமராவில் பொருத்தப்பட்டுள்ள மெமரி கார்டு மூலம் காட்சியை பதிவுசெய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 5 நிமிடத்துக்கு ஒருமுறை காட்சிகள் பதிவாகும்படி தனது வெப்கேமராவை விஜயகுமார் வடிவமைப்பு செய்திருப்பது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தனது வீட்டுப் பகுதியை கண்காணிப்பதற்காக தயார் செய்த கேமராவை அடுத்தவர் குளியலறையில் பொருத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

குளியலறையில் கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் வத்தலக்குண்டு ஈழத்தமிழர் குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்