திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரியும் எழுத்தர் மற்றும் முதுநிலை எழுத்தர் 40 பேருக்கு பொது பணிநிலைத்திறன் கீழ் பதவி உயர்வு மற்றும் பணி ஒதுக்கீடு ஆணையினை ஒரே நாளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, பொது பணிநிலைத் திறன் குழுவின் தலைவரும், திண்டுக்கல் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளருமான கோ.காந்திநாதன் உத்தரவினை வெளியிட்டார். இந்த நிலையில், நேற்று (01/10/2022) அதற்கான ஆணையை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் செயலாளருக்கு வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, தமிழக கூட்டுறவுத் துறை இந்தியாவே போற்றும், அளவிற்கும் சிறப்பான துறையாக மாறி வருகிறது. பதவி உயர்வு பெறும் கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி பதவி உயர்வும், இடமாறுதலும் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகளின் சிறப்பான பணியினால் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்" என்றார்.
நிகழ்ச்சியின்போது திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் காந்திநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் பிள்ளையார் நத்தம் முருகேசன், பாறைப்பட்டி ராமன், திண்டுக்கல் சரக கூட்டுறவுத் துறையின் துணைப் பதிவாளர் முத்துக்குமார், மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.