சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சித்ரவதைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை வரும் 17-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் சித்ரவதைச் செய்து தாக்கியுள்ளனர். இதில் மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீசார் அடித்தே கொன்றுள்ளனர் என்று சாத்தான்குளத்தில் அவர்களது உறவினர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் படி சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார். அடுத்து பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் தேடுவதாக தகவல் அறிந்து தலைமறைவாக இருந்து ஊர் ஊராக மாறி தப்பியோட முன்றபோது சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் தலைமறைவாக இருந்த சாத்தான்குளம் காவல்நிலைய காலவர் முத்துராஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். விளாத்திகுளம் அருகே நேற்று மாலை அவரது இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசார், காவலர் முத்துராஜை தூத்துக்குடியில் உள்ள அரசன் குளத்தில் நேற்றிரவு கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
பின்னர், மருத்துவப் பரிசோதனைக்காக முத்துராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட முத்துராஜை வரும் 17-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.