சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் அந்த வழக்கை கடந்த 10-ந் தேதி சி.பி.ஐ. போலீசார் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.
இந்த வழக்கில் கைதானவர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ மனு தாக்கல் செய்தது. இவர்கள் 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமந்தகுமார் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த மனு மீது விசாரணை நடந்தது.
சாத்தான்குளம் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜா, முருகன் உள்ளிட்ட 5 பேரையும் 3 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு செல்ல மதுரை மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவிட்டதோடு 5 பேரையும் 16ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகிய இருவரையும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து 5 பேரும் சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்படுவர். அதன் பின்னர் சிபிஐ காவல் விசாரணைக்கு உட்படுத்தபடுவர். சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளத்தில் நேரில் சென்று விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது.