சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஆகியோர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீடு, அவரது உறவினர்கள், குடும்பத்தார் மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, காவல் நிலையம் என பல்வேறு கட்டங்களாக விசாரணையை மேற்கொண்டு வந்திருந்த நிலையில், அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் (காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய) 5 பேரையும், 7 நாள் காவலில் விசாரிப்பதற்காக சி.பி.ஐ. தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து அந்த மனுவின் மீதான விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையில், காவலர்கள் 5 பேரையும் முதலில் நாளை காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள் என நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஏற்கனவே சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கினை, சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். அதேபோல் தற்போது சிபிஐ போலீசாரும் இதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளனர். கொலை, சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், தடயங்களை அழித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்காவது குற்றவாளியாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் குற்றவாளியாக காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.