பூம்புகார் கடலில் குளிக்கச் சென்ற ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கடலோரப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாகை மாவட்ட சுற்றுலா தலங்களில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது பூம்புகார். அங்கு சிலப்பதிகார கலைக் கூடதோடு, கடற்கரையும் இருப்பதால் வெளி மாநில மாவட்ட மாணவர்களும், பொதுமக்களும் சுற்றுலாவாக வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் விடுமுறையை கொண்டாட கும்பகோணம் அருகே உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி,டெக் முதலாம் ஆண்டு படித்து வரும் ஆந்திராவை சேர்ந்த சந்தீப் குமார் ரெட்டி, தனது சக நண்பர்களோடு கடலில் குளிக்க சென்று இருக்கிறார்.
அங்கு மகிழ்ச்சியாக குளித்துக்கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கடலில் அலை அதிகரித்ததால், பெரிய அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டிருக்கிறான். கடலில் சிக்கிய மாணவனை கண்ட சக நண்பர்கள் செய்வதறியாமல் சத்தம் போட்டுள்ளனர். அதை கண்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அலையில் சிக்கிய மாணவனை மீட்டு 108 வாகனத்தின் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பூம்புகார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாணவனின் இறப்பு பூம்புகார் கடற்கரையோரப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.