கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், ஜவ்வாக இழுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஆட்சி நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.
இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை. ஜெயலலிதா மயக்கமடைந்த பின்னர் அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு சசிகலா விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கருத்துகளை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவப் படிப்புகளை நான் படித்தது கிடையாது. என்ன பரிசோதனை, எந்தெந்த மருந்துகள் தர வேண்டும் என்று மருத்துவக் குழுவினரே முடிவு செய்தனர்; ஜெயலலிதாவுக்கு முதல்தர சிகிச்சை தரவேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.வெளிநாட்டுக்கு ஜெயலலிதாவை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நான் என்றுமே தடையாக இருந்ததில்லை; ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன். விசாரணை நடத்தினாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.