தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில் தேர்தல் தேதி முன்னராகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் மும்மரமாக அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. அதேபோல் தேர்தல் நடைமுறைகளுக்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் சசிகலாவை சந்தித்த பிறகு ஐ.ஜே.கே உடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். சசிகலாவை சரத்குமார் சந்தித்த பிறகு இது நடந்துள்ளதால் அவசர அவசரமாக எடப்பாடி தீவிர பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதேபோல பாஜகவிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பாஜக தங்களுக்கு 60 தொகுதிகள் வேண்டும் எனக் கூறியதோடு, தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவிடம் நீங்கள் பேச வேண்டும் என பாஜக மாநில தலைமை அதிமுக தலைமையிடம் கூறியதால் அதிமுகவும் அமித்ஷாவுடன் பேச தயாராகி வருகிறது. இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜெயித்த அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமல்லாமல் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக எம்எல்ஏ வேட்பாளர்களும் மீண்டும் வாய்ப்பு கேட்கிறார்கள். ஆகையால் பாஜகவிற்கு பாமகவிற்கு கொடுக்கப்பட்ட 23 தொகுதிகளை விட குறைவாகவே கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தீர்கள் என்றால் அதிமுக நிற்கக்கூடிய தொகுதிகள் குறையும். அதேபோல் அதிமுகவிற்கு அதிகமாக செல்வாக்கு உள்ள தொகுதிகளையும் பாஜகவிற்கு ஒதுக்கக் கூடாது. இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். ஆகையால் பாஜகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்க கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஒருசிலர், அதிமுக வெற்றி அடையக்கூடிய செல்வாக்குமிக்க தொகுதிகளை பாஜகவிற்கு கொடுத்தாலோ அல்லது நல்ல வெற்றிவாய்ப்புள்ள அதிமுக நபர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலோ சசிகலா பக்கம் சென்று விடுவோம் என்று ஓபனாகவே எடப்பாடியிடம் சொல்லியுள்ளனர். இதனால் எடப்பாடி குழப்பத்தில் இருக்கிறார். இவ்வளவு நாட்கள் பணிவாக பேசினார்கள் ஆனால் இப்பொழுது மாறி பேசுகிறார்களே என்ற குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இதுகுறித்து அவர் விசாரிக்கையில், நேற்று இருந்த நிலவரம் வேறு. நேற்று முதல்வர் என்ற பதவியில் இருந்தீர்கள். அப்ப இருந்த நிலவரம் வேற ஆனால் இன்று தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. இப்பொழுது உள்ள நிலவரம் வேற. அவரவர்கள் தங்களுடைய பதவியை தக்கவைக்க தான் பார்ப்பார்கள். அதனால் தான் அப்படி பேசுகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நம்மை எதிர்க்கவும் தயாராக இருப்பார்கள். அவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறியுள்ளனர் என தெரிவிக்கின்றனர் அதிமுகவினர்.
அதேபோல் சசிகலாவும், தனக்கு வேண்டிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் அங்கேயே இருந்து சீட்டு பெறுவதற்கான வாய்ப்பினை பாருங்கள். அவர்கள் சீட்டுக் கொடுக்கவில்லை என்றால் அதற்கடுத்த நடவடிக்கைகளை பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருக்கிறாராம்.
இதை எல்லாவற்றையும் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மௌனமாகவே இருக்கிறார் என அதிமுக மேல்மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.