செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் ஊராட்சியில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதே பகுதியில் சுமதி என்ற பெண்சாமியார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பொது நிலத்தை ஆக்கிரமித்து, அதில் வீடு கட்டி மரத்தடியில் குறி மேடை அமைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தினங்களிலும் அருள்வாக்குச் சொல்லி வந்தார்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு அருகே மற்றொரு பகுதியில் அரசு பொது நிலத்தை ஆக்கிரமித்து, மேலும் ஒரு குறிமேடை கட்ட முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்டதும், ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அப்பகுதிக்கு திரண்டு சென்று குறிமேடை கட்டுபவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தும் வெகுநேரம் ஆகியும் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள், ராஜீவ்காந்தி நகர் பிரதான சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் குறி மேடை அமைக்கும் இடத்திற்குச் சென்று போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரிடம் ஆக்கிரமிப்பை அகற்ற முறையிட்டனர். அப்போது அவர்களிடம் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், கேரளாவைச் சேர்ந்த சுமதி என்ற பெண் சாமியார் மேற்படி ராஜீவ் காந்தி நகர்ப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குறிமேடை அமைத்து குறி சொல்லி வந்தார்.
இதில் அவர் அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய தினங்களில் அவரிடம் செல்பவர்களிடம் பேய் விரட்டுவதாகவும், பில்லி, சூனியம் எடுப்பதாகவும் கூறி ரூ.5,000 முதல் 50,000 வரை பணம் வசூலித்து வருகிறார். இதில் குணமடையாதவர்கள் மீண்டும் சென்று பணத்தைத் திருப்பிக் கேட்டால் உங்களை சூனியம் வைத்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். மேலும், இவர் இதுபோன்று அனுமந்தபுரம், ஊரப்பாக்கம், ரத்தினமங்கலம், கொளப்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம், மேலக்கோட்டையூர், நெல்லிகுப்பம் ரோடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் குறி மேடை அமைத்து இதுபோன்ற தொழில் செய்து வருகின்றார்.
தற்போது 11-வது இடமாக போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து குறி மேடை கட்டுவதற்காக கான்கிரீட் அமைக்கும் பணி செய்து வருகிறார். இதனை இப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சென்று தட்டிக் கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். மேலும், அடியாட்களை வைத்துக் கொலை செய்து விடுவதாகவும், பில்லி, சூனியம், மந்திரம் வைத்து அனைவரையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டுகிறார். எனவே மேற்படி போலி பெண் சாமியார் எங்கெங்கெல்லாம் அரசு நிலங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் ஆக்கிரமித்து கட்டியுள்ள குறி மேடைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும்.
மேலும், அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஊராட்சியில் உள்ள அனைத்துத் தரப்பு பொதுமக்களும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். அப்போது வருவாய்த்துறை மற்றும் போலீசார் அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மேலக்கோட்டையூர் ஊராட்சியில் நேற்று 3 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.