புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி கிழக்கு – மேற்பனைக்காடு இடையே நேற்று முன்தினம் அதிகாலை கல்லணை கால்வாயில் தண்ணீர் வரத் தொடங்கிய சில மணி நேரத்திலேயே சுமார் 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென உடைப்பு ஏற்பட்டு வயல்களில் பாய்ந்தோடி நில குளங்கள் நிரம்பினாலும், தண்ணீர் வீணானது.
தண்ணீர் திறப்பதற்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்யாமலா தண்ணீர் திறந்தார்கள். இந்த உடைப்பு எப்படி ஏற்பட்டது என்ற அனைவரின் கேள்விக்கும் கல்லணை கால்வாய் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், 'எலி ஓட்டை இருந்து அதில் தண்ணீர் புகுந்து இப்படி உடைப்பு ஏற்பட்டுள்ளது' என்று கூறினார்.
இதைக் கேட்ட மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. 25 அடி அகலத்தில், பல வருடங்களாக சாலையாக உள்ள தரையில் எலி ஓட்டை போட்டதாக சொல்லும் காரணம் ஏற்கமுடியவில்லை என்று கூறினார்கள்.
உடைப்பை சரி செய்ய விவசாயிகள், பொதுப்பணித்துறை ஒப்பந்த தொழிலாளர்கள் இணைந்து சுமார் 15 மணி நேரம் வரை போராடி தற்காலிகமாக அடைத்தனர். நேற்று மழுமையாக அடைக்கப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டது. சுமார் ரூ. 2 லட்சம் வரை பணம் செலவிடப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கவணக்குறைவால் அரசு பணம் ரூ. 2 லட்சங்கள் வீணாக்கப்பட்டது. கரை பலப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 200 கனஅடி தண்ணீர் மட்டுமே செல்கிறது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, உடைப்பு ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். பொறியாளர் சொல்வது போல எலி ஓட்டையால் சுமார் 50 அகலத்திற்கு கரை உடைய வாய்ப்புகள் இல்லை. அதனால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.