சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழியான சசிகலா சிறைத்தண்டனை பெற்று, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்த நிலையில், அதிமுகவை அவர் மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுப்பார் என பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் திடீரென அரசியல் துறவறம் மேற்கொள்வதாக, பொது வாழ்விலிருந்து விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சமீபகாலமாக தொண்டர்களுடன் அவர் பேசும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகிவருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவருகிறது.
இந்நிலையில், மீண்டும் சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. ''தொண்டர்கள் விருப்பப்படி நான் கட்டாயம் வருவேன். நல்லபடியாக கட்சியைக் கொண்டு செல்ல வேண்டும். கட்டாயம் வந்துவிடுவேன். ஏனெனில் கட்சியை வீணாக்க முடியாது. சாதி, மத பாகுபாடு நான் பார்க்க மாட்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியைத்தான் கடைப்பிடிப்பேன்'' என தொண்டர் ஒருவருடன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.