
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த எந்த விஷயமும் அதிமுகவில் நடைபெறாத காரணத்தால், கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசி வாயிலாக பேசிவருகிறார். இது தமிழ்நாட்டு அரசியலிலும், அதிமுக நிர்வாகிகள் இடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் சசிகலா பேசியது தொடர்பான 44வது ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், "ஒருவரின் சுயநலத்திற்காகக் கட்சித் தொண்டரை நீக்குவது சரியா? அவரே ராஜினாமா செய்தார், இல்லை என்றால் அவரைத்தான் அமர வைத்திருப்பேன். தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை நான் செய்து காட்ட வேண்டும். எனக்கென்று என்ன இருக்கிறது, இறுதிவரை தொண்டர்கள் பக்கமே இருந்து விட்டுச் செல்கிறேன்" என சசிகலா கூறியுள்ளார்.