நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்களில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வழக்கம் போல் நேற்று (12-10-23) நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் காலை புறப்பட்டு சென்றது. தொடர்ந்து இயக்கப்பட்டு சென்ற ரயில், அரியலூர் வழியாக பழைய பாம்பன் ஓடை என்ற காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலை ஒன்று கல்லைக் கட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தது. அதனைக் கண்ட ரயில் என்ஜின் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு ரயிலை உடனடியாக நிறுத்தினார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விருத்தாச்சலம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த ரயில் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், உயர் அழுத்த மின் கம்பியில் சேலை தானாக காற்றில் வந்து விழ வாய்ப்பு இல்லை என்று தெரியவந்தது. மேலும், ரயில் என்ஜினின் மேல் பகுதியில் உள்ள கம்பியும், மின்சார கம்பியும் உரசும் போது எளிதில் ரயிலை தீ விபத்தில் சிக்கவைத்து விடலாம் என்ற நோக்கத்தில் சமூக விரோதிகள் செய்த சதி திட்டமாக இருக்கலாம் என்றும் தெரியவந்தது. அதன் பின்னர், ரயில்வே ஊழியர்கள் உயர் அழுத்த மின் கம்பியில் தொங்கி கொண்டிருந்த சேலையை பத்திரமாக மீட்டனர். இதனை தொடர்ந்து, ரயிலை தீ வைத்து சிக்க வைக்க சதி திட்டம் செய்தவர்களை ரயில்வே காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.