நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சிலர் அனுமதி பெறாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்துக்கொண்டு, வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக மாவட்ட எஸ்பி அருளரசுவுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் வாழவந்தி நாடு காவல்துறையினர் கொல்லிமலை முழுவதும் அவ்வப்போது தீவிர சோதனை வருகின்றனர். உரிமம் பெறாத துப்பாக்கிகள் சிலவற்றை பறிமுதல் செய்தனர். சிலர் கைதும் செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் தாமாக முன்வந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிககை எடுக்கப்படமாட்டாது என சில நாள்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இரு நாள்களுக்கு முன்பு கொல்லிமலை அரியூர் சோளக்காடு பகுதியில் காவல் ஆய்வாளர் தீபா, எஸ்ஐ மணி மற்றும் காவலர்கள் ரோந்து சென்றபோது, சோளக்காடு சுடுகாட்டு பகுதியில் உள்ள ஒரு முள் புதரில் 35 நாட்டுத்துப்பாக்கிகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது. வாழவந்திநாடு காவல்துறையினர் அவற்றை கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பகுதியில் ஒரே இடத்தில் இருந்து 35 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.