ஆசீர்வதித்து அனுப்பப்பட்ட ஆளுநர். ஆய்வு என்ற பெயரில் வரம்பு கடந்து நடந்து கருப்புக்கொடியையும் புறம்கண்டவர். ’அவர் தாத்தா இல்லை, அருகிலிருந்து வீடியோ எடுத்ததாக’ கூறி கைதான கல்லூரிப் பேராசிரியையின் ஆடியோ பேச்சு அவர் வரை செல்கிறது. சந்தேகத்துக்கு ஆளானவரே, சந்தானம் விசாரிப்பார் என்று அறிவிப்பது நீதித்துறைக்கே விடும் சவால்? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும்; அதனால் தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். தமிழ்மக்களின் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
விருதுநகர் தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் விதத்தில் பேசியுள்ள ஆடியோவில் ஆளுநர் பெயரும் இடம்பெற்றுள்ளது.’அவர் தாத்தா இல்லை, அருகிலிருந்து வீடியோ எடுத்ததாக’ அவரை நோக்கிச் செல்கிறது பேராசிரியையின் பேச்சு. பல்கலைக்கழக ”மேலிடம்” என்பது இதையே குறிப்பிடுவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், முன்னெப்போதுமே இல்லாத வகையில், உடனடியாக அந்தப் பேராசிரியை கைது செய்யப்பட்டு, சந்தானம் இதை விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது. கல்லூரிப் பேராசிரியை ஒரு கருவியாக செயல்பட்டிருப்பதை உணர்த்துவதாகவும் உள்ளது.
எனவே அவருடைய ஆடியோ பேச்சு குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த குற்றவியல் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். அதனால் தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். ஆளுநரின் துணைவேந்தர் நியமனங்களை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.