ஐயப்பன் கோவில் விவகாரம் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
சுவாமி ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதிப்பது குறித்து வழக்கு தொடர்ந்ததே சங்பரிவார் தொடர்புடையவர்கள் தான் என்பதை கேரள அமைச்சர் கடக்கம் பள்ளி சுரேந்திரன் கூறியிருக்கிறார்.
இதை கேரள ஊடகங்கள் வெளிப்படுத்தி விவாதங்களை நடத்தி வருகின்றன. இது குறித்த விவாதங்களை, இந்து சமுதாய பெருமக்களின் உள் விவகாரம் என்ற வகையிலேயே நாங்கள் பார்க்கிறோம்.
பத்திரிக்கையாளர்கள் எங்களை போன்றவர்களிடம் கருத்து கேட்கும்போது கூட, இது குறித்து இந்து சமுதாய ஆன்மீக வாதிகளும், தலைவர்களும் முடிவு செய்ய வேண்டிய விஷயத்தில் எங்களை போன்றோர் கருத்து சொல்வது அழகல்ல.. என்ற வகையிலேயே பதிலளித்து வருகிறோம்.
ரேஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்திற்கு சென்று வந்தது குறித்து புதிய சர்ச்சை வெடித்து, சம்பந்தம் இல்லாமல் முஸ்லிம் சமூகத்தை சிலர் விமர்சிக்கிறார்கள்.
தயவு செய்து அந்த பெண்மணியின் பின்புலத்தை ஆராய்ந்து பாருங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அவர் ஒரு கடவுள் வழிபாடு என்ற இஸ்லாமிய கொள்கை வட்டத்திலிருந்து வெளியேறியவர்.
2017 ஆம் ஆண்டு விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்த கர்வாப்ஸி என்ற மதம் மாறும் நிகழ்வு மூலம் தன்னை ரேஹானா சூர்ய காயத்ரி என தன்னை மதம் மாற்றிக் கொண்டவர்.
அவரது கணவர் பெயர் மனோஜ் ஸ்ரீதர். இவரது பின்னணியை WWW. Fa cebook.com / rehana Fathima.Parthoos என்ற முகநூல் மூலம் அறியலாம்.
இந்த பின்னணியையும், சூழ்ச்சியையும் புரியாமல் அந்த ஒரு பெண்ணின் நடவடிக்கையை முஸ்லிம் சமுதாயத்தோடு இணைத்து பேச வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இஸ்லாமிய கொள்கை வட்டத்திலிருந்து வெளியேறி, பெயரின் ஒரு பகுதியை மட்டுமே வைத்திருப்பவரையும். அவரது செயல்பாடுகளையும் முஸ்லிம் சமூகத்தோடு தொடர்பு படுத்தி பேச வேண்டாம் என்றும், இந்து சமுதாய பெருமக்களோடு முஸ்லிம் சமூகம் வைத்திருக்கும் அன்பையும், உறவையும் சிக்கல்படுத்திட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இஸ்லாமிய மார்க்கம் பிற மதங்களையும், பிற கடவுள்களையும் விமர்சிக்க கூடாது என அறிவுறுத்துகிறது. " உங்கள் மார்க்கம் உங்களுக்கு சிறந்தது. எங்கள் மார்க்கம் எங்களுக்கு சிறந்தது" என குர் ஆன் பிற மத மக்களின் உணர்வுகளை மதிக்க சொல்கிறது.
அந்த வகையில், முஸ்லிம் சமுதாயம் உங்களின் உணர்வுகளை மதிக்கிறது. பொதுவாக, உச்சநீதிமன்றம் மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் அதிரடியாக கருத்துகளை கூறுவதில் எங்களை போன்றவர்களுக்கு உடன்பாடுகள் இல்லை.
இதை தெளிவாக புரிந்துக் கொள்ளுமாறு எமது அனைத்து உறவுகளையும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.