மழைக்கால டெங்குவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டு வரும் வேளையில், அதிகாரிகளின் மெத்தனத்தால் டெங்கு பாதிப்பால் மாவட்டத்திலேயே முதன்மையான பஞ்சயாத்து என பெயர் வாங்கியுள்ளது சங்கராபுரம் ஊராட்சி.
கரோனா பெருந்தொற்று குறைந்துக் கொண்டிருக்கும் வேளையில், அதற்குப் போட்டியாக பாதிப்புக்களை உருவாக்கி வருகின்றது டெங்கு வைரஸ். பொதுவாக மழைக்காலம் துவங்கி விட்டாலே டெங்கு, சிக்கன்குனியா ஆகிய வைரஸ்கள் மக்களை பெருமளவில் அவதிக்குள்ளாக்கும். சில நேரம் உயிரிழப்பு அபாயமும் ஏற்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2012, 2013, 2015, 2017ம் ஆண்டுகளில் சிக்கன்குனியா மற்றும் டெங்குவின் பாதிப்பு மிக அதிகம். பின்னாளில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், மழைக்காலங்களில் அவ்வப்போது மக்களை கடும் சிரமத்திற்குள்ளாக்கும். இம்முறை அவ்வாறு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாக்கடைகள் கண்டறியப்பட்டன. இவைகளில் இலை, குப்பைகள் தேங்கி, அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்வதில் இடையூறு ஏற்படாத வண்ணம் அவற்றை அகற்றும் பணியினை செவ்வனே செய்ததது அரசு நிர்வாகம். இத்தகைய நடவடிக்கைகளால் மற்ற மாநிலங்களில் டெங்குவின் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் தமிழ்நாட்டில் சற்று குறைவு தான் என்கின்றது புள்ளிவிபரம்.
இதற்கு மாறாக, சிவகங்கை மாவட்டத்தில் அரசிற்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் நோக்கில் சில அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் மாவட்டத்தில் டெங்கு வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் குறிப்பாக 15 வார்டுகள் கொண்ட சங்கராபுரம் பஞ்சாயத்தில் டெங்குவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எட்டு. 44 தூய்மைப்பணியாளர்கள் மற்றும் 35 தூய்மைக்காவலர்கள் கொண்ட இந்த பஞ்சாயத்து தான் மாவட்டத்திலேயே அதிகமான பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட பகுதி என்கின்றது சுகாதாரத்துறை குறிப்பு ஒன்று. பாதிக்கப்பட்டோர்களில் 5 வயது குழந்தை தொடங்கி 36 வயது வரை உள்ள டெங்கு நோயாளிகள் உயிர்காக்க தஞ்சமடைப்பதிருப்பது தனியார் மருத்துவமனைகளை மட்டுமே. இதில் ஒருவர் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். " சில அரசியல்வாதிகளின் தலையீட்டால் சங்கராபுரம் பஞ்சாயத்து நிர்வாகம் சீரழிந்திருக்க, இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகள் தன் இஷ்டப்படி மெத்தனமாக நடக்க டெங்குவின் வீரியம் இந்த பஞ்சாயத்தில் அதிகமாகியுள்ளது. இதனை சரி செய்து மக்களின் உயிரை காக்க வேண்டியது அரசின் கடமை" என்கின்றனர் சங்காரபுரம் பகுதி மக்கள்.