புரட்சி பாரதம் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று 21 ஆண்டுகள் ஆன தொடக்க விழா, கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் சென்னை தியாகராஜ நகரில் உள்ள பி.டி. தியாகராஜர் மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, “நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இன்னும் இருக்கிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது சனாதன வேரறுப்புக்கான ஒரு முடிவு; ஆகையால் அதை நாங்கள் வரவேற்கிறோம். தமிழகம் பெரியார், அண்ணா பூமியாக இருந்து வரும் சூழ்நிலையில், இங்கே பாஜகவின் சனாதன செயல்பாடு எடுபடாது. தமிழ்நாட்டில் பாஜக அதிமுக தயவால் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்தது. அதிமுக இல்லையென்றால் பாஜக ஒரு சீட்டு கூட வென்றெடுக்க வாய்ப்பே இல்லை.
இப்படி பாஜகவை எதிர்த்தாலோ அவர்களது கூட்டணியில் இருந்து விலகினாலோ உடனடியாக அமலாக்கத்துறையை வைத்து சோதனை நடத்தி அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சிக்கும் நெருக்கடி கொடுத்து வருகிறது பாஜக. இப்படி தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற இதுபோன்ற அராஜகம் செய்து வருகிறது. ஆனால் ஒருபோதும் அது இந்த தமிழ்நாட்டில் எடுபடாது; இது பெரியார், அண்ணா பூமி என்பதால் இங்கே எடுபடாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.