Skip to main content

“பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்” - இ.பி.எஸ்.!

Published on 21/02/2025 | Edited on 21/02/2025

 

We will win with a rational bilingual policy Edappadi Palaniswami

உலக தாய்மொழி தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழியின் சிறப்பு, அவசியம், பன்மொழி கலாச்சாரம் ஆகியவற்றை போற்றவும் உணர்த்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக தாய்மொழி தினமான இன்று (21.02.2025)  தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இது தொடர்பாக சமுக வலைதளங்களில் வாழ்த்துகளை பதிவு பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன், எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை ‘உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்’ என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு இதன்மூலம் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்