தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள செயின்ட் ஆன்ஸ் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
இந்த விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஒரு காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தவிர வேறு யாரும் கல்வி கற்க முடியாது. நிலம் வாங்க வேண்டுமென்றால் எல்லாராலும் வாங்கிவிட முடியாது. சனாதன தர்மத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்தியாவில் 8% இருந்தவர்களுக்கு தான் நிலம் சொந்தம், கல்வி சொந்தம், வேறு யாரும் கல்வி கற்க முடியாது. நிலம் வாங்க முடியாது.
கள்ளக்குறிச்சியில் இப்போதுகூட ஒரு குருகுலம் உள்ளது. அந்த குருகுலத்தில் அவர்கள் மட்டும் தான் கல்வி கற்க முடியும். நீங்களும், நாங்களும் கல்வி கற்க முடியாது. எவ்வளவு கொடுமையான விஷயம். ஆனால், சனாதன தர்மம் தான் இந்த நாட்டை வளர்த்தது என்று சொல்லிக்கொள்வார்கள். மாணவர்களுக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும். ஜாதியை சொல்லி நம்மை ஒதுக்கி தள்ளிவிட்டு அடிமையாக்கி, நாம் எதுவும் உரிமை கோராமல், எதுவும் நமக்கு கிடையாது என்பதை உருவாக்கி, அவர்களே கல்வி கற்க வேண்டும் என்று இந்த நாட்டை உருவாக்கிக்கொண்டார்கள்.
தி.மு.க.வின் திராவிட மாடல் தான் தமிழ்நாட்டை தலை நிமிர வைத்துள்ளது என்று சொன்னால், பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
இந்தியாவில் 26% பெண்கள் பட்டம் பெற்றவர்கள். ஆனால் தமிழ்நாட்டில், படித்தவர்கள், படித்துக்கொண்டிருப்பவர்கள் என கணக்கிட்டால் 72% பெண்கள். அதேபோல், இந்தியாவில் ஆண், பெண் என இருபாலரும் 34% என்றால் தமிழ்நாட்டில் 51% பேர். இதனை பிடிக்காதவர்கள் நீட் தேர்வை கொண்டுவந்து கல்வியை சீர்குலைக்கின்றனர்” என்று பேசினார்.