
கடந்த பொங்கல் திருவிழாவின் போது தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பொருள்களின் தரம் குறைவாக இருந்ததாக வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து தரமற்ற பொங்கல் பரிசு பொருட்களை வழங்கிய நிறுவனங்களுக்கு தமிழக அரசு அபராதம் விதித்திருந்தது. இந்நிலையில் தரமற்ற பொங்கல் பொருட்களை தந்த அதே நிறுவனங்களுக்கு ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்குவதற்கு மீண்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது கண்டனத்திற்குரியது என அதிமுகவின் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தரமற்ற பொருட்களை வழங்கிய அந்த நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டுமே தவிர அதற்கு அபராதம் மட்டும் விதித்து விட்டு மீண்டும் அவற்றை பொருட்களை விநியோக அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்திருப்பது மக்கள் மத்தியில் அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே அந்த குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுக்கு ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்க அனுமதி அளித்ததை ரத்து செய்ய வேண்டும். அந்த நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.