Skip to main content

குற்றவாளிகளுக்கு சல்யூட்! -போலீசாரை மாமூல் படுத்தும்பாடு!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

‘குற்றமிழைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு பதிவுசெய்யாத போலீஸ் அதிகாரி மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை? மாமூல் வசூலித்ததாக கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை போலீஸ்காரர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது?’

தமிழ்நாடு மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன்,  தானாக முன்வந்து விசாரித்த வழக்கு ஒன்றில் இவ்வாறு கேள்விகளை எழுப்பி,  காவல்துறை டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.  

police


விருதுநகர் மாவட்ட காவலர் ஒருவர், நீதிபதியின் மேற்கண்ட உத்தரவைச் சுட்டிக்காட்டி, காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றிவரும் தன்னை உறுத்திக்கொண்டிருக்கும் விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். அவர் அளித்த தகவல் இது -  

police


சார்பு ஆய்வாளர், தலைமைக்காவலர் உள்ளிட்ட நால்வர் கொண்ட தனிப்படையினர், விருதுநகர் மாவட்டம், அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட சிவந்திபட்டி கிராமத்திற்கு அருகில், அதிகாலை 2 மணியளவில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி (TN 67 BH 1989)  வாகனத்தை வளைத்தனர். இச்சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வீரார்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் அருண், மணியம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் உட்பட மொத்தம் ஐந்து பேரையும்,  அங்கிருந்த ஸ்ப்லெண்டர் டூ வீலரையும், ஜேசிபி வாகனத்தையும் கைப்பற்றி,  அதிகாலை 3 மணிக்கெல்லாம் அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலையம் சென்றனர். இந்த விஷயம் அறிந்து,  காலை 8 மணிக்கு அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலையம் வந்தார் சாத்தூர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன்.  “உன்னை யாரு அங்கே போகச்சொன்னது? நீ இவ்வளவு நாள் ஸ்பெஷல் டீம்ல இருந்தது போதும். அதான்.. உனக்குதான் ஏற்கனவே டிரான்ஸ்பர் போட்டாச்சுல்ல.. போய் உன்னோட ஸ்டேஷன்ல வேலை பாரு..” என்று சார்பு ஆய்வாளருக்கு சுடச்சுட ‘டோஸ்’ விட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினார். அந்தத் தலைமைக்காவலர் நேர்மைக்குப் பெயர் போனவராம்.  யாரிடமும் டீ கூட வாங்கிக் குடிக்க மாட்டாராம். அவரிடமும் “நீ ஸ்பெஷல் டீம்ல கிழிச்சது போதும். போய் ஸ்டேஷன் ட்யூட்டிய பாரு.” என்று அவமரியாதையாகப் பேசியிருக்கிறார். மணல் அள்ளிய 5 பேரையும், அவர்களுடைய ஜேசிபி வாகனத்தையும் டூ வீலரையும், வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் மொத்தமாக விடுவித்துவிட்டார். 

 

police


“சாத்தூர் உட்கோட்டத்தில் இது  ‘மாமூலாக’ நடப்பதுதான்”  என்று ஆதங்கத்துடன் அந்தக் காவலர் கூற, சாத்தூர் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டோம்.  “நான் யார்கிட்டயும் போன்ல பேச மாட்டேன்.” என்று நம்மைத் தவிர்க்க நினைத்த அவரிடம் “குற்றச்சாட்டே உங்கள் மீதுதானே?” என்று தொடர்ந்து கேள்வி கேட்க, “மொதல்ல போனை வைங்க..” என்றார் எரிச்சலுடன். சம்பந்தப்பட்ட அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையமோ “அப்படியா நடந்துச்சு?” என்று போலியாக ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. 

குட்காவிலிருந்து மணல் வரை,  தமிழக காவல்துறை அதிகாரிகள் பலரையும் மாமூல்தான் ஆட்டிப்படைக்கிறது!

 

 

சார்ந்த செய்திகள்