கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்ததால், அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதையடுத்து, அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. அதனால் மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து மளமளவென அதிகரித்தது. இதையடுத்து, செப். 7ம் தேதியன்று, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 43வது முறையாக இந்த அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதும் பதினாறு கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.
இன்று (செப். 9) காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 67000 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு நேரடியாக 60 ஆயிரம் கன அடியும், கால்வாய்கள் வழியாக 900 கன அடியும் தண்ணீர் வெளியேறிக்கொண்டிருந்தது. அதன்பிறகு, மதிய வேளையில் தண்ணீர் திறப்பு 70 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இரவு 9.30 மணி முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 16 கண் மதகுகள் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேநேரம், அணைக்கு வரும் நீர் வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது.