சேலத்தில், மளிகை வியாபாரியைத் தாக்கிவிட்டு, வீட்டிலிருந்த 50 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்துச்சென்ற வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம், செவ்வாய் பேட்டை தெய்வநாயகம் தெருவைச் சேர்ந்தவர் மோகன்குமார் (35). ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இரண்டு தளங்கள் கொண்ட வீட்டின் தரை தளத்தில் மளிகை பொருள்களை மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். முதல் தளத்தில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். இரண்டாம் தளத்தில், தன் கடையில் வேலை செய்து வரும் ஊழியர்களைத் தங்க வைத்துள்ளார்.
மொத்த வணிகம் என்பதால் மோகன்குமாரிடம் எப்போதும் லட்சக்கணக்கில் பணம் புழங்கும். இதை நீண்ட நாள்களாக நோட்டம் விட்ட அவரிடம் வேலை செய்து வந்த ஓம் பிரகாஷ் என்ற ஊழியர் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டி வந்துள்ளார். இந்நிலையில், கரோனா ஊரடங்கால் தன் மனைவி, குழந்தைகளைச் சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்துவிட்டார் மோகன். ஊழியர்களும் அவரவர் சொந்த மாநிலத்திற்குச் சென்றுவிட்டனர். ஓம்பிரகாஷ் மட்டும் மோகன்குமாருக்கு உதவியாக இங்கேயே இருந்து கொண்டார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, மோகன்ராஜ் மட்டும் வீட்டிலிருந்துள்ளார். அப்போது, ஓம் பிரகாஷ் தனது கூட்டாளிகள் இருவருடன் வந்து மோகன்ராஜை சரமாரியாகத் தாக்கி, கயிற்றால் கட்டிப்போட்டுள்ளார். பின்னர் அவர்கள், வீட்டு பீரோவிலிருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். வீட்டிலிருந்த சிசிடிவி படக்கருவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, செவ்வாய் பேட்டை காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் தனிப்படையினர் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளையர்கள் மும்பைக்கு ரயிலில் சென்று கொண்டிருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மகாராஷ்ட்ராவுக்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர் அங்கு கொள்ளையர்களைச் சுற்றி வளைத்தனர். அப்போது, திடீரென்று ஓம் பிரகாஷ் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ஓம் பிரகாசன் தம்பி மங்களராம், உறவினர் சுரேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். உள்ளூர் காவல்துறையினருடன் அவர்களை செவ்வாய் பேட்டை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 37 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். உடனடியாக அவர்கள் இரிவையும் மும்பை நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். இந்த சூழலில், அவர்களைச் சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. தப்பியோடிய ஓம் பிரகாஷ் தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.