Skip to main content

ரவுடியை கடத்திய நகைக்கடை அதிபர்; கூலிப்படை கும்பல் கைது; கடத்தப்பட்ட ரவுடிக்கும் 'காப்பு'

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

 salem rowdy and jewelry shop owner arrested by police

 

சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரவுடி கடத்தல் வழக்கில், பிரபல நகைக்கடை அதிபர் மற்றும் கூலிப்படை கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட ரவுடியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சேலம் கோரிமேடு பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (37). ரவுடியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், நவ. 1ம் தேதி தனது நண்பர் பிரவீன்குமார் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பத்து பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்திறங்கினர். அவர்கள் ரவுடி பூபதி, பிரவீன்குமார் ஆகியோரை கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரடியாகக் காரில் கடத்திச் சென்றனர். 

 

சேலம் 5 சாலை அருகே சென்றபோது காரில் இருந்து கீழே குதித்து பிரவீன்குமார் தப்பிச்சென்று விட்டார். பூபதி கடத்தப்பட்ட தகவலை அவருடைய பெற்றோரிடம் பிரவீன்குமார் கூறியுள்ளார். இதுகுறித்தப் புகாரின் பேரில், சேலம் மாநகரக் காவல்துறை துணை ஆணையர் மாடசாமி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. காவல்துறையினர் நெருக்கடியைத் தொடர்ந்து கடத்தல் கும்பல் திருவண்ணாமலை அருகே பூபதியை இறக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். அங்கிருந்து பூபதியை காவல்துறையினர் மீட்டு சேலம் வந்தனர். 

 

காவல்துறை விசாரணையில் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ரவுடி கடத்தல் சம்பவத்தில், சேலத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபர் ஏகாம்பரம், அவருடைய கடை மேலாளர் பாபு ஆகியோர் மூளையாகச் செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கடன் பிரச்சனையில் சிக்கித்தவித்து வந்த ஏகாம்பரம், வழக்கமான நகை வியாபாரத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். தொழில் தொடர்பாக வங்கியில் வாங்கிய கடனுக்கு சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்திருந்தார். 

 

 salem rowdy and jewelry shop owner arrested by police

 

சொத்துக்களை விற்பது தொடர்பாக ஏகாம்பரம், ரவுடி பூபதியிடமும் உதவி கேட்டிருந்தார். அவரும் வங்கி கடனை அடைப்பதற்கு எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். மேலும், ஏகாம்பரத்திடம் இருந்து பெருமாபாளையத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டார். ஆனால் அதற்கான பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

 

ஏற்கனவே கடனில் சிக்கித்தவிக்கும் ஏகாம்பரம், தனது நிலத்திற்கான பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வரும் பூபதி மீது மேலும் கோபமடைந்தார். பணத்தைக் கேட்டு அவரிடம் சென்றபோது, ''இந்த காலத்தில் யாராவது பணம் வாங்காமல் நிலத்தை எழுதிக் கொடுப்பார்களா?'' என்று, பூபதி கேலி பேசியதோடு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். இதைக்கேட்டு ஏகாம்பரம் மேலும் அதிர்ச்சி அடைந்தார். இது ஒருபுறமிருக்க, இந்த விவகாரத்தில் சமரசமாகப் போய்விடலாம் எனக்கூறிய பூபதி, ஏகாம்பரத்தின் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காகச் சென்றிருந்தார். அப்போது ஏகாம்பரத்திற்குச் சொந்தமான நான்கு சொத்துப் பத்திரங்களை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். 

 

அடுத்தடுத்து தன்னை ஏமாற்றி வரும் பூபதி மீது கடும் ஆத்திரம் அடைந்த ஏகாம்பரம், அவரைக் கடத்திச்சென்று தனது சொத்துப் பத்திரங்களையும், நிலத்திற்கான பணத்தையும் பெற முடிவு செய்தார். இதற்காக கூலிப்படை ரவுடி பிரபாகரன் என்பவரின் உதவியை நாடினார். அவருடைய தலைமையிலான கும்பல்தான் சம்பவத்தன்று பூபதியைக் கடத்திச்சென்று ஏகாம்பரத்தின் சொத்துப் பத்திரங்களை மீட்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

இதையடுத்து நகைக்கடை அதிபர் ஏகாம்பரம், அவருடைய மேலாளர் பாபு ஆகியோரை அழகாபுரம் காவல்நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ரவுடி பூபதியை கடத்தியதாக எஸ்.கொல்லப்பட்டி ஏரிக்காட்டைச் சேர்ந்த பிரபாகரன் (29), அன்னதானப்பட்டி புதிய கந்தப்பா காலனியைச் சேர்ந்த யுவராஜ் (28), கருப்பூர் கொல்லப்பட்டியைச் சேர்ந்த கவுதம் (30), அன்னதானப்பட்டி மூணாங்கரட்டைச் சேர்ந்த மணிமாறன் (32), குகை நெய் மண்டியைச் சேர்ந்த நவீன்குமார் (33) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

இவர்கள் ஐந்து பேரும் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த போது உதவி ஆணையர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்திகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்பாக இந்த கும்பல், ரெட்டிப்பட்டி பகுதியில் கருப்பசாமி (32) என்பவர் காரில் சென்றபோது அவரை வழிமறித்து, கத்தி முனையில் அவரிடம் இருந்த 2500 ரூபாயை பறித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. 

 

இந்த கும்பலுடன் தொடர்புடைய மேட்டூரைச் சேர்ந்த பிரகாஷ், விஜி உள்பட மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர்களை அழகாபுரம் காவல் ஆய்வாளர் காந்திமதி தலைமையிலான தனிப்படையினர் தேடி வருகின்றனர். 

 

ரவுடி பூபதி கைது: நகைக்கடை அதிபர் ஏகாம்பரம் அளித்த புகாரின்பேரில், ரவுடி பூபதி, அவருடைய அண்ணன் பெரியசாமி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கார், 4 சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறந்து வந்த பூபதி கையில் பணப்புழக்கம் அதிகளவில் இருந்து வந்துள்ளது. ஒரு மோசடி வழக்கில் அவரைப் பிடிக்கச் சென்ற மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றது, பணமோசடி, பெண்களைத் தாக்கியது உள்ளிட்ட 7 வழக்குகள் ஏற்கனவே பூபதி மீது நிலுவையில் உள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

 

பூபதிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்