சேலத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் 5 சாலை பகுதியில் ராணா மேன்பவர் கன்சல்டன்சி என்ற பெயரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களான உமாராணி, கார்த்திக் ஆகிய இருவரும் பலரிடம் அரசுத்துறை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக்கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளனர். இவ்வாறு பணம் பெற்றவர்களுக்கு அவர் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.
இந்த மோசடி குறித்து துளசிராம் என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அரசுத்துறையில் வேலைவாங்கிக் கொடுப்பதாகக்கூறி உமாராணி மற்றும் கார்த்திக் ஆகியோர் தன்னிடம் 5.93 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகாரில் கூறியிருந்தார். இதுபோல் இருபதுக்கும் மேற்பட்டவர்களிடம் இவ்வாறு பணம் பறித்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகுமாரி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தார். உதவி ஆணையர் மோகன், ஆய்வாளர் விஜயகுமாரி மற்றும் காவல்துறையினர் உமாராணி, கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.