ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பீகார் மாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் மட்டுமின்றி, உள்ளூர் ரயில்வே காவல்துறையினரும் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ரயில்வே காவல்துறையினர் திங்கள்கிழமை (ஜூலை 25) அதிகாலையில், சேலம் வழியாக சென்ற தன்பாத் & ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறி திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சோதனையிட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பயணி இருந்தார். அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதித்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அந்த வாலிபர், பீகார் மாநிலம் வைசாலி பகுதியைச் சேர்ந்த அமித்குமார் (வயது 29) என்பதும், ஓடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, திருப்பூர் மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்ல இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.