
தேனி புதிய பேருந்து நிலையமான கர்னல் பென்னிகுவிக் பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த 85 வயது மூதாட்டியை மீட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்க வைத்த தேனி எஸ்.பி.பாஸ்கரனுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அருகே இருக்கும் சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி. 85 வயதான இவர் தனது மகள் வீட்டில் இருந்து எட்டு மாதங்களுக்கு முன்னர் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், பார்வதியை உறவினர்கள் அனைவரும் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். கண்டுபிடிக்கமுடியாத நிலையில், அவர் இறந்துவிட்டதாகவே கருதியுள்ளனர்.
இந்நிலையில், தேனி புதிய பேருந்துநிலையம் அருகில் சுற்றித்திரிந்த பார்வதியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பார்த்து மூதாட்டி குறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மூதாட்டியை மீட்டு விசாரித்ததில், அவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் என தெரியவந்தது.

உடனே தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து, கொடுமுடி காவல்நிலையத்திற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் பார்வதியின் உறவினர்களை தேனி வரவழைத்தனர். எட்டு மாதங்கள் ஆன பின்னர் உறவினர்களை கண்ட பார்வதி கண் கலங்கினார்.
இது தொடர்பாக தேனி மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் இராமலெட்சுமியிடம் கேட்டபோது... எங்க எஸ்.பி தான் மூதாட்டி குறித்து தகவல் தெரிவித்தார். உடனே மூதாட்டியை மீட்டு குளிக்க வைத்து, சாப்பாடு துணிகள் வாங்கிக்கொடுத்து எங்க பாதுகாப்பில் வைத்திருந்தோம். அதன்பின் ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகம் மூலமாக மூதாட்டியின் உறவினர்களை தொடர்பு கொண்டு வரச்சொன்னதின் பேரில் மூதாட்டியின் மகள், மகன், மருமகன் ஆகியோர் இன்று காலை வந்தனர்.
அவர்களிடம் மூதாட்டி பார்வதியை ஒப்படைத்தோம். அதோடு அனைவரையும் எங்கள் வாகனத்தில் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றி அனுப்பியது மனதிருப்தியாக இருந்தது என்று கூறினார். இது பற்றி பார்வதி உறவினர்களிடம் கேட்டபோது....
இந்த அம்மாவை எங்கெங்கோ தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை, இறுதியில் இறந்துவிட்டார் என்று நினைத்து குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த போது தான் தேனி எஸ்.பி. கண்டுபித்து கொடுத்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எஸ்.பி.யையும் எங்க வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்று கூறினார்கள். அதுபோல் தேனி நகர மக்களும் கூட எஸ்.பி. பாஸ்கரனின் மனிதாபிமானத்தை கண்டு பாராட்டி வருகிறார்கள்.