சேலத்தில் காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சாராய வியாபாரி ஒருவர் மரத்தின் மீது ஏறிக்கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக போக்குக்காட்டிய சம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் பொன்னம்மாபேட்டை கார்பெட் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (39). இவர் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து, குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தார். டாஸ்மாக் கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும். ஆனால் ராஜசேகரன் தனது சந்துக்கடை மூலம் 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வரும் ராஜசேகரை கைது செய்யக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் திடீரென்று பொன்னம்மாபேட்டை ரயில்வேகேட் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவருடைய வீட்டில் சோதனை நடத்திய அம்மாபேட்டை காவல்துறையினர், வீட்டில் இருந்து 1200 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை குண்டர் சட்டத்திலும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமினில் விடுதலை ஆகி வெளியே வந்த ராஜசேகர், மீண்டும் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் அம்மாபேட்டை காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், அவர் சில நாள்களாக தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை (பிப். 25) அவர் வந்தார். திடீரென்று அவர், சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். மேலும், கையில் 'ஆல்அவுட்' கொசு மருந்து பாட்டிலை வைத்துக்கொண்டு, யாராவது தன்னை பிடிக்க வந்தால் மருந்தைக் குடித்து தற்கொலை செய்வேன் என்றும் மிரட்டினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் நகர காவல்துறையினரும், தீயணைப்பு, மீட்புப்படை வீரர்களும் அங்கு வந்தனர். அவரை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் ஏணி வைத்து மரத்தின் மீது ஏறினர். இதைப்பார்த்த ராஜசேகர், கொசு மருந்தை குடித்து விட்டார். பின்னர் காவல்துறையினர், 'உங்கள் மீது வழக்கு எதுவும் போட மாட்டோம். யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். கீழே இறங்கி வாருங்கள்,' என்று சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து ராஜசேகர் மனம் மாறி, ஏணி வழியாக கீழே இறங்கி வந்தார். அப்போது அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டனர். அவர் ஏற்கனவே கொசு மருந்தை குடித்திருந்ததால் மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, 'சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சந்துக்கடையில் மதுபானங்களை விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று அவரை விசாரணைக்கு அழைத்தோம். அவரை கைது செய்து விடுவோம் என்ற பயத்தில் இவ்வாறு நாடகம் ஆடுகிறார்,' என்றனர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள பீரங்கியை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வர இருந்த நிலையில், திடீரென்று சாராய வியாபாரி மரத்தில் ஏறி அலப்பறை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.