மதவாதிகள், சுயநல அரசியல்வாதிகளை இளைஞர்கள் புறந்தள்ளிவிட்டு, அச்சமற்ற, குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன், சேலம் பெரியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பேசினார்.
சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (நவ. 27) நடந்தது. பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 130 மாணவ, மாணவிகளுக்கு வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தங்கப்பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளில் பிஹெச்.டி. ஆய்வை முடித்த 130 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கி, பாராட்டினார்.
பெரியார் பல்கலை மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலையில் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 49534 பேருக்கு பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் பட்டமளிப்பு உரையாற்றினார். அவர் பேசியது:
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்னை இல்லை. வேலை செய்ய விரும்பாதவர்கள்தான் வேலைவாய்ப்பின்மை பற்றி பேசுகின்றனர். எல்லோருமே இங்கே, நிறுவனத்தின் தலைவராக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர். ஒவ்வொருவரும் 'ஒயிட் காலர்' எனப்படும் சட்டை கசங்காமல் செய்யும் வேலைகளையே விரும்புகின்றனர். அந்த எண்ணம்தான், வேலைவாய்ப்பின்மைக்கு முக்கிய காரணம்.
நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காதபோது, கிடைத்ததைக் கொண்டு திருப்தி கொள்ளுங்கள். அதற்காக, நீங்கள் மேம்பட்ட நிலைக்காக முயற்சிக்கவே கூடாது என்று சொல்லவில்லை. பல நேரங்களில் நமக்கு உரிய அங்கீகாரம் சீக்கிரம் கிடைக்காமல் போகலாம். அதற்காக காத்திருப்பது அவசியம். அதுவரை அந்த குறிப்பிட்ட துறைகளில் நாம் அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் வளர்த்துக் கொண்டே இருந்தோமானால், நிச்சயமாக நமக்கான அங்கீகாரம் ஒருநாள் கிடைத்தே தீரும்.
இன்று மதத்தலைவர்களாக சொல்லிக்கொள்பவர்களில் பலரும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதில்லை. சில அரசியல் தலைவர்களும், அவர்களின் தொண்டர்களும் போலி மதவாதிகளை சுய ஆதாயத்திற்காக ஊக்குவிக்கின்றனர். பெரும்பாலானோர் சமூகத்தின் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக வேலை செய்வதில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் புதிய இந்தியாவை, லஞ்சம், குற்றங்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கக்கூடிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்கள் கரங்களில் வழங்கப்பட்டு உள்ளது. சமூக நலன் ஒன்றையே எப்போதும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
நல்லது செய்ய எண்ணுவோருக்கு பல தடைகள் உள்ளன. யாராவது நன்மை செய்ய முயற்சித்தாலும்கூட, அவர்களை சமூகத்தை விட்டே ஒதுக்கி விடுகின்றனர். அல்லது, அவர்களை சமூகத்தைக் கெடுக்க வந்த கருப்பு ஆடு என்றோ அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்றோ முத்திரை குத்தி விடுவார்கள்.
ஆகையால், இளைஞர்கள் போலி மதவாதிகள், சுயநல அரசியல்வாதிகள், கெடுதல் செய்வோரை புறந்தள்ளிவிட்டு, அச்சமற்ற, குற்றங்களற்ற சமுதாயத்தை படைக்க உழைக்க வேண்டும்.
இவ்வாறு ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் பேசினார்.
உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் ஷர்மா, பல்கலை துணை வேந்தர் குழந்தைவேல், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, பயிற்சி ஆட்சியர் வந்தனா கார்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.