Skip to main content

மணல் கடத்தல் சம்பவம்; போலீசில் தஞ்சம் அடைந்த வீஏஓ

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

salem omalur manathal vao vinoth kumar sand related incident
கோப்பு படம்

 

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் மானத்தாள் என்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் வினோத்குமார். இவர் கடந்த 18 ஆம் தேதி அப்பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முத்துராஜ் என்பவர் டிராக்டர் மூலம் மணல் கடத்திச் சென்றுள்ளார். இதனை கவனித்த வினோத்குமார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து கனிமவளத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

 

கனிமவளத்துறையினர் இரு வாகனத்தையும் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முத்துராஜ் மற்றும் ஓட்டுநர் விஜி ஆகிய இருவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இருவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்று விஏஓ வினோத்குமார் தனது அலுவலகத்துக்கு வருகை தரும்போது, முத்துராஜ் வழிமறித்து தனது வாகனத்தை பறிமுதல் செய்ததால் தொழில் பாதிக்கப்பட்டதாகக் கூறி வினோத்குமாரை தாக்கி செல்போனை பறித்ததோடு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு வெட்டுவதற்கு முயன்றுள்ளார்.

 

இதனால் வினோத்குமார் அங்கிருந்து தப்பித்து தனது இருசக்கர வாகனம் மூலம் தொளசம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் இவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்