சேலம் மாநகராட்சியில் போலி சம்பள பட்டியல் மூலம் 88 லட்சம் ரூபாய் சுருட்டிய துப்புரவு ஊழியரை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தவர் வெங்கடேஷ்குமார் (38). கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட நிர்வாக அலுவலகம் தாதகாப்பட்டியில் இயங்கி வருகிறது. கணக்குப்பிரிவில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, துப்புரவு தொழிலாளியான வெங்கடேஷ்குமார், மண்டல அலுவலகத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டார். கடந்த பத்து ஆண்டுகளாக இப்பிரிவில் பணியாற்றி வந்தார்.
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களுக்கும் மாதந்தோறும் சம்பள பட்டியல் தயாரிப்பது, காசோலைகளை வங்கிக் கணக்கில் செலுத்துவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்தார். இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை தயாரிக்கும்போது, தற்செயலாக கேஷ் டிஸ்போஸபிள் புத்தகத்தை பார்த்தபோது, சம்பள பட்டியல் விவரங்கள் சிலவற்றில் திருத்தங்கள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகத்தின்பேரில் முந்தைய ஆண்டுகளுக்கான கேஷ் டிஸ்போஸபிள் புத்தகங்களை எடுத்து வருமாறு வெங்கடேஷ்குமாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டபோது, அவர் சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவானார். அதிகாரிகள் விசாரணையில், அவர் போலி சம்பள பட்டியல் தயாரித்தும், காசோலைகளில் திருத்தம் செய்தும் 88 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அவர் தன்னுடைய தாயார் விஜயா, தம்பி மோகன்குமார், தம்பி மனைவி பிரபாவதி ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள்போல் சித்தரித்து, அவர்களின் பெயர்களில் காசோலைகள் தயாரித்து வங்கியில் இருந்து பணத்தை எடுத்துள்ளார்.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு அளித்த புகாரின்பேரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 15ம் தேதி வெங்கடேஷ்குமார், அவருடைய தம்பி மோகன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தாயார் விஜயா, தம்பி மனைவி பிரபாவதி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டதாக சொல்கிறது மத்திய குற்றப்பிரிவு.
இந்த மோசடி குறித்து முதன்முதலில் நக்கீரன் இணையம்தான் கடந்த 14ம் தேதி அம்பலப்படுத்தியது. நமது கள விசாரணையில், மேலும் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2015-2016, 2016-2017, 2018-2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் வெங்கடேஷ்குமார் தயாரித்த சம்பள பில் பட்டியல், காசோலைகள் குறித்தும் தணிக்கை அதிகாரி யவனராணி தலைமையிலான குழுவினர் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
தணிக்கைத்துறை துணை ஆய்வாளரான செந்தில் என்பவர்தான் ஆரம்பத்தில் இந்த மோசடி குறித்து தோண்டி எடுத்தார். அதனால் அவர் இருந்தால் எங்கே நம் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சிய வெங்கடேஷ்குமார், அவரை அந்த மண்டலத்தில் இருந்து எப்படியாவது இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியருக்கும் தணிக்கை அலுவலர் செந்திலுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸுக்கு மொட்டை பெட்டிஷன் போட்டுள்ளார். ஆனால் செந்தில் குற்றமற்றவர் என்பது தெரிந்ததால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனாலும், சர்ச்சைக்கு இடம் தரக்கூடாது என்பதால் அவரே விருப்பப்பட்டு அம்மாபேட்டை மண்டலத்திற்கு இடமாறுதல் பெற்றுச் சென்றுவிட்டார் என்கிறார்கள், இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வரும் ஊழியர்கள்.
கடந்த மூன்று ஆண்டு காலத்தில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணியாற்றிய உதவி ஆணையர் சுந்தர்ராஜன், தற்போது முதன்மை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக உள்ள ரமேஷ், சாய்லட்சுமி ஆகியோரும் முந்தைய காலங்களில் நடந்த வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம், இவர்கள் தங்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் வந்து விடுமோ என அஞ்சி மோசடி ஆவணங்களை திருத்தம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.
இது ஒருபுறம் இருக்க, இந்த மோசடியில் முதல் குற்றவாளியான வெங்கடேஷ்குமார், அவருடைய தம்பி மோகன்குமார் ஆகிய இருவரையும் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். செப். 24ம் தேதி அவர்களை காவலில் எடுத்தனர். வெங்கடேஷ்குமார் தயாரித்த போலி சம்பள பட்டியல் ஆவணங்களை கேட்டதற்கு அவர் ஏதேதோ சாக்குபோக்குகளைச் சொல்லி காவல்துறையினரை அலைக்கழித்து வருவதாகச் சொல்கின்றனர். செப். 26ம் தேதியுடன் மூன்று நாள் காவல் முடிந்து, மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இதற்கிடையே, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான தணிக்கை அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கும்படி கொண்டாலம்பட்டி மண்டல அலுவலகத்திற்கும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தணிக்கை அறிக்கை முடிவில், இந்த மோசடி தொகை மதிப்பு மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.