"சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களின் நிர்வாகிகளுடன் கரோனா தொற்று நோய்த் தடுப்பு குறித்த கூட்டம் திங்கள்கிழமை (நவ. 30) நடந்தது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியது...
"சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களின் நுழைவு வாயில்களில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் வரும்போது தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பிறகே உள்ள செல்ல அனுமதிக்க வேண்டும்.
நுழைவு வாயிலில் கை கழுவுவதற்கான வசதிகள், கைகளை சுத்தம் செய்வதற்கான சேனிடைஸர் வைக்க வேண்டும். பொதுமக்கள் கைகளை சேனிடைஸர் மூலம் சுத்தப்படுத்திய பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியம்.
அனைத்து வர்த்தக நிறுவன ஊழியர்களும் முகக்கவசம் மட்டுமின்றி கையுறையும் அணிந்திருக்க வேண்டும். பணியாளர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தக் கூடாது. ஊழியர்களில் யாருக்கேனும் இருமல், சளி இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் அடிக்கடி கைகளால் தொடக்கூடிய கதவுகள், கைப்பிடிகள், மேஜைகள், நாற்காலிகள், தரை பகுதிகள், கழிவறைகள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டு பொருள்களையும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து வருவோரையும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோரையும் பணியமர்த்தக்கூடாது.
தொற்று நோய் தடுப்பு வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க 8 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன" என கூறினார்.