சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம் (60). மாவோயிஸ்டான இவரை, கேரள மாநிலக் காவல்துறையினர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
மணிவாசகத்தின் உடல், சொந்த ஊரான ராமமூர்த்தி நகரில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் மணிவாசகத்தின் மனைவி கலா, தங்கைகள் லட்சுமி, சந்திரா, லட்சுமியின் மகன் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், மணிவாசகத்தின் இறப்புக்கு பழி வாங்கியே தீருவோம் என்று சபதம் போட்டு, முழக்கமிட்டனர்.
இதுகுறித்து ராமமூர்த்தி நகர் விஏஓ சங்கர் அளித்த புகாரின்பேரில் தீவட்டிப்பட்டி காவல்துறையினர், வேறு வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிவாசகத்தின் மனைவி கலா, தங்கை சந்திரா ஆகியோரை கைது செய்தனர். மேலும், சொந்த ஊரில் வசிக்கும் லட்சுமி (45), சுதாகர் (23) ஆகியோரையும் கைது செய்தனர்.
லட்சுமி, சுதாகர் ஆகிய இருவரையும் ஓமலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவரின் உத்தரவின்பேரில் சுதாகரை சேலம் மத்திய சிறையிலும், லட்சுமியை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் காவல்துறையினர் அடைத்தனர். இதே வழக்கில் தலைமறைவாக உள்ள லட்சுமியின் கணவர் சாலிவாகனன், மாவோயிஸ்ட் விவேக் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.